மலைவாழ் மக்களுக்கு இன்றுவரை சாலை வசதியில்லாமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
உடுமலைப்பேட்டை மலைவாழ் கிராமம் ஒன்றில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, டோலி கட்டி தூக்கிச்செல்லும் வீடியோவை தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் பதிவிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் கொண்டு வந்த கிராம சாலைகள் திட்டம் மூலம், பல ஆயிரம் கோடி நிதி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டும், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று.
மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அந்தத் திட்டங்களை ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக் கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில்லை. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.