தருமபுரி மக்களவைத் தேர்தலில் திமுக வெல்வது கடினம் என அக்கட்சியை சேர்ந்த எம்.பி. செந்தில் குமார் பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் இவருக்கு பெண்கள் மத்தியில் மட்டுமின்றி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரிடத்திலும் ஆதரவு பெருகிறது. எனவே தருமபுரி மக்களவைத் தொகுதியை பாமக வெல்லும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் சொல்கிறது.
இந்த நிலையில், தருமபுரி திமுக எம்.பி.யான செந்தில் குமார் தனியார் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்; 2014ல் திமுக, அதிமுக, பாஜக என மூன்று கூட்டணிகள் களம் கண்டபோது பாஜக கூட்டணியிலிருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெற்றிப்பெற்றார். சமூக அடிப்படையில் பார்த்தால், பாமக இங்கே வலுவாக இருக்கிறது. ஒருவேளை வன்னியர் சமூகத்தின் 80 சதவீத வாக்குகளை பாமக பெறுகிற பட்சத்தில், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் வாக்குகளை திமுக முழுமையாகப் பெற வேண்டும். ஆனால், அதிமுக தனி அணியாக நிற்கும்போது, அது சாத்தியமாகுமா எனத் தெரியவில்லை. எனவேதான், தருமபுரியில் திமுக வெல்வது எளிதல்ல என்கிறேன்.
எனவே சௌமியா அன்புமணியின் வெற்றி இன்னும் எளிதாக கிடைக்கும் என தற்போதைய திமுக எம்.பி. பேசியிருப்பது, தருமபுரியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.