தமிழகத்திலும் புல்லட் ரயில் ஓடும்: நெல்லையில் பிரதமர் மோடி உறுதி!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் நெல்லை நயினார் நாகேந்திரன், விருதுநகர் ராதிகா சரத்குமார், தென்காசி ஜான் பாண்டியன், கன்னியாகுமரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி விஜயசீலன் ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) வாக்கு சேகரித்தார்.

பிரதமர் மோடி வேட்டி, ஜிப்பா, அங்கவஸ்திரம் அணிந்தபடி அம்பாசமுத்திரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அதன் பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு கார் மூலம் சென்றார். அப்போது பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்த உடன் காரின் வெளியே நின்றவாறு பிரதமர் மோடி கையசைத்தபடி சென்றார். தொண்டர்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர். அனைவரின் வரவேற்பையும் ஏற்றுக்கொண்டு சென்றார் பிரதமர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்ற தொடங்கும் முன் பாரத் மாதா கி ஜெய் என்று பிரதமர் நரேந்திர மோடி முழக்கமிட்டார். அதன் பின்னர் வணக்கம் நெல்லை என தமிழில் கூறிவிட்டு உரையை தொடங்கினார். நெல்லையப்பர், காந்திமதியம்மனின் பாதங்களை வணங்கி உரையை துவங்குகிறேன். உங்களது உற்சாகம், உங்களின் பங்களிப்பை பார்த்த உடன் திமுக மற்றும் காங்கிரஸ் இ.ண்டி. கூட்டணிக்கு தூக்கமே தொலைந்து போயிருக்கும். உங்களின் ஆதரவுக்கு தலை வணங்குகிறேன்.

நண்பர்களே நேற்றுதான் நீங்கள் எல்லாம் தமிழ் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடி இருப்பீர்கள். அந்த வாழ்த்துக்களுடன் அந்த தமிழ் புத்தாண்டில்தான் பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது. அந்த அறிக்கையில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல நல்ல திட்டங்களை உங்களுக்காக செயல்படுத்த இருக்கிறோம். ஏழைகளுக்கு மூன்று கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கவும், முத்ரா யோஜனா திட்டத்தில் நிறைய பேருக்கு கடன் வழங்கப்படும்.  அனைவரின் யோசனையும் கேட்டு தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

வளர்ந்த தமிழகம்தான் வளர்ந்த பாரதமாக மாறும் என்ற நம்பிக்கையோடு உங்கள் முன்னாடி எங்களின் தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்கிறோம்.

நண்பர்களே கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகக்கடுமையாக உழைத்திருக்கிறது. பல நல்லத்திட்டங்களையும் தந்துள்ளது. திருநெல்வேலி சென்னைக்கு நடுவில் கூட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உங்களுக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்பகுதி மக்கள் பல நன்மைகளை பெருகிறார்கள். முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது நாங்கள் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், மிக விரைவாக நாம் இந்தப்பகுதிக்கு தெற்கிலும் புல்லட் ரயிலை தொடங்குவதற்காக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். புதிய அரசு மீண்டும் அமைந்த உடன் அதற்கான பணிகள் தொடங்கும்.

நண்பர்களே, கடந்த 10 வருஷத்தில் தமிழகத்தில் உள்ள தாய்மார்களும், சகோதரிகளும் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று எல்லாரும் ரொம்ப ஆச்சரியப்படுகிறார்கள். அதனால் நிபுணர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் இதற்கான காரணம் என்வென்று புரியவில்லை. இதற்கெல்லாம் ஒரு காரணம் என்னவென்றால் நான் அவர்களுடைய சிரமத்தையும், துன்பத்தையும் உணர்ந்திருப்பதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளுக்கு ஜல் ஜீவன் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆவாஜ் யோஜனாவில் 12 லட்சம் வீடுகள் கட்டியுள்ளோம். இவை அனைத்தும் பெண்கள் பெயரில்தான். 40 லட்சம் பேருக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 57 லட்சம் கழிப்பறைகள் கட்டியிருக்கோம். கர்ப்பிணிப்பெண்களுக்கு கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் நிதியுதவி கொடுத்திருக்கிறோம். முத்ரா லோன் மூன்று லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இப்படி எல்லாம் தாய்மார்களுக்கு தொண்டு செய்தால் அவர்களின் அன்பு ஏன் கிடைக்காது.

வ.உ. சிதம்பரத்தை பின் பற்றி பாஜக ஆட்சி நடத்துகிறது.காமராஜரை திமுக, காங்கிரஸ், அவமதித்தது. மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை திமுக அவமதித்தது எனக் மோடி குற்றம் சாட்டினார்.

திமுக, காங்கிரஸ் தமிழகத்தின் உயிர் நாடியான கச்சத்தீவை அண்டை நாட்டுக்கு தாரை வார்த்தது. இதனால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் போதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இங்குள்ள பெற்றோர்கள் மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர். இங்கு போதையை யார் விற்கிறார்கள் எனக் கேட்டால் குழந்தை சொல்லும் திமுக என்று. போதை வணிகத்தை எதிர்த்து நான் போராடுவேன். வளர்ச்சி அடைந்த தமிழகம் வேண்டும் என்றால் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என வேண்டினார். பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் மிகப்பெரிய ஆதரவை தமிழக மக்கள் வழங்குகிறார்கள் எனத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top