வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் காந்தி ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக தாக்கினார்.
குஜராத் மாநிலம், சோட்டா உதய்பூரில் இன்று (மே 04) நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ராகுல் தலைமையில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் அமேதியில் தோல்வி அடைந்த ராகுல் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.
இப்போது வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் காந்தி ஓட்டம் பிடித்துள்ளார். ராகுலுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் சீட் கிடைப்பதில் பிரச்னை இல்லை.
ராகுல் ரேபரேலி தொகுதியில் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைவார். பா.ஜ.க., இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. பிரதமர் மோடிக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர். சுகாதாரம், கல்வி போன்ற பணிகளை நரேந்திர மோடி செய்துள்ளார். காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி எங்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறப் போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.