தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக சி.வேலாயுதம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். அவர் நேற்று (மே 08) அதிகாலை உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது மறைவு பாஜகவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைத்தளப்பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் முதல் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் திரு சி.வேலாயுதம் அவர்களின் மறைவை அறிந்து வேதனையடைந்தேன். அவரைப் போன்றவர்கள்தான் தமிழ்நாட்டில் நமது கட்சியைக் கட்டமைத்து, மக்களிடம் நமது வளர்ச்சித் திட்டங்களை விளக்கியவர்களாவர். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்கள் மீது அவர் கொண்ட அக்கறைக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.