கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழல் வழக்குகளில் சிக்கி இருந்த அமைச்சர்கள், 2021 திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு வழக்குகளில் இருந்து அவசர அவசரமாக விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்ட விதத்தில், நடைமுறை தவறுகள் கண்ணுக்கு பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்ட அந்த வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி அவர் கூறியதாவது: ‘‘அதிமுக ஆட்சிக்காலத்தில், சத்தியதேவ் என்ற நீதிபதி அரசுக்கு எதிர்ப்பான தீர்ப்புகள் வழங்கினார் என்பதற்காக அவரது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஏ.ஆர்.லக்ஷ்மணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது. அதேபோன்று, நான் தொடர்ந்த டான்சி வழக்கை விசாரித்த நீதிபதி சிவப்பா, ஜெயலலிதாவின் மனுவை ஏற்காமல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதால் 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர், அவர் பந்தாடப்பட்டார். அவர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு போனார் என்பதெல்லாம் வரலாறு. ஆனால் இதற்கு எல்லாம் நாங்கள்தான் கண்டனம் தெரிவித்தோம்.
அதே போன்று நான் தொடர்ந்த ‘டான்சி’ நில வழக்கை விசாரித்த நீதிபதி 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பந்தாடப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போனார் என்பதை அனைவரும் அறிந்தோம்.
தற்போது, ஏற்கனவே முடிக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என, நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2018ல், முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அளித்த, ‘டெண்டர்’ விவகாரத்தில், 4,800 கோடி ரூபாய் அளவுக்கு ஊழலும் முறைகேடும் நடந்ததாக நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றது. இந்த வழக்கு மறுபடியும் உயர் நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அளித்த தீர்ப்பு அனைவருக்கும் தெரியும்.
தற்போது நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று சொன்ன அதே நீதிபதி ஒரு மாதம் கழித்து திமுக அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், பொன்முடி மீதான வழக்குகளை தாமாகவே விசாரித்து நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடப் போவதாக கூறியுள்ளார். இதனை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம்.
அது மட்டுமின்றி ஏற்கனவே பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்ட அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்றும் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ.க்களாக இருக்கின்றனர். அவர்கள் மீதான வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
திமுக அமைச்சர்களை மட்டும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது என்றால் நிச்சயமாக நீதிபதிக்கு அந்த அதிகாரம் உள்ளது. ஆனால் தற்போது பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆர் எஸ் பாரதியின் இந்த கூற்று, சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு விடப்பட்ட மறைமுக மிரட்டலாகவே தெரிகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நீதிபதிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர். அதே போன்று எங்கள் ஆட்சிக்காலத்திலும் நீதிபதிக்கு தண்ணீர் மற்றும் மின்சாரத்தை தடை செய்வோம் என்று சொல்லாமல் சொல்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஊழல் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது ஒவ்வொரு சாமானியனின் குரலாக இருக்கிறது.