படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி: மகிழ்ச்சியில் நீலகிரி மக்கள்!

நீலகிரி மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளார். அவரது வெற்றியை மாவட்டம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் அதிகளவு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நகரம் மற்றும் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கப்பல் படை, ராணுவம், பொறியாளர், மருத்துவர் உள்ளிட்ட துறைகளில் சேர்ந்து சாதனை புரிந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, நெடுகுளா குருக்கத்தியை சேர்ந்தவர் மணி. இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீரா. இந்த தம்பதிக்கு ஜெய்ஸ்ரீ என்ற மகள் உள்ளார். ஜெயஸ்ரீதான் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார். ஜெய்ஸ்ரீ தனது பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் முடித்தார். அதனை தொடர்ந்து கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து சில காலம் ஐடி துறையில் பணியாற்றி வந்தார்.

ஆனால் அத்துறையை விட்டு விமானியாக வேண்டும் கனவோடு, அதற்கான பயிற்சியில் சேர்ந்தார். இதற்காக தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சியை மேற்கொண்டு வந்தார். அதன்படி விமானியாக தேர்ச்சியும் பெற்றார்.

இது தொடர்பாக ஜெய்ஸ்ரீ கூறியதாவது: எங்களது சமுதாயத்தில் வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்களுக்கு படிப்பதற்கே அனுப்ப தயக்கம் காட்டுவார்கள். ஆனாலும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடு விட்டு நாடு விமான பயிற்சி பெறுவதற்கு தைரியமாக எனது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

அப்போது பெண்ணுக்கு இவ்வளவு செலவு செய்வது தேவையா? என்ற கேள்வியை எனது பெற்றோரிடம் எழுப்பினர். ஆனால் பெண் குழுந்தைகளுக்கு அதிகமான செலவு செய்யலாம் என தாய், தந்தை கூறுவார்கள்.

அனைவருக்கும் விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என நினைப்பார்கள். ஆனால் விமான வேலையில் ஏராளமான சவால்கள் உள்ளது. 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை மற்றும் மனநல பரிசோதனைகள் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் விமானியாக நீடிக்க முடியாது. பணியை இழக்கவும் வாய்ப்பு இருக்கும்.

எனவே ஒரு விமானியாக வர வேண்டும் என்றால் மனதளவில் தைரியம் அதிகமாகவே வேண்டும். எனது ஆரம்பகால பள்ளி, படிப்பும் அங்கிருந்து ஆசிரியர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு தற்போது நன்றி சொல்ல வேண்டும். அது மட்டுமின்றி எங்கள் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக வந்திருப்பது மிகுந்து மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு ஜெய்ஸ்ரீ கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top