‘‘மக்கள் வளர்ச்சி பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு கவலையில்லை,’’ எனவும், அதற்கு மாற்றாக தனது குடும்ப வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என திண்டுக்கல் மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று (செப்டம்பர் 14) என் மண், என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
நத்தம் ந.கோவில்பட்டி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் துவங்கிய பாதயாத்திரை கைலாசநாதர் கோவில், துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக பேருந்து நிலையம் அடைந்தது. திண்டுக்கல்லில் நாகல் நகரிலிருந்து ஆர்.எஸ்., ரோடு வழியாக மணிக்கூண்டை பாதயாத்திரை அடைந்தது.
இந்த இரண்டு இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
நத்தம் மேம்பாட்டுக்காக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. உலகத் தரத்தில் 4 வழிச்சாலைக்கு மட்டுமே திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் பிரதமர் நரேந்திர மோடி 1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு குடும்ப வளர்ச்சி மீது மட்டுமே அக்கறை. மக்கள் வளர்ச்சியில் அக்கறை இல்லை. காவல்துறையின் கைகளை கட்டி போட்டு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்தது மட்டுமே சாதனை.
இந்த மாவட்டத்தில் மட்டும் மூன்று வாரங்களில் 41 கொலைகள் நடந்துள்ளன. ஸ்டாலினுக்கு மக்கள் வளர்ச்சி பற்றி சிறிதும் கவலையில்லை. டாஸ்மாக் துறையை வளர்ப்பது குறித்த கவலை மட்டுமே அவருக்கு உண்டு. மகளிர் உரிமை திட்டம் என்று பணத்தை ஒத்தையாக கொடுத்து விட்டு கத்தையாக மக்களிடம் கொள்ளையடிப்பது தான் திமுகவின் அரசியல் ஸ்டைல். ஆவின் பாலகத்தில் நெய்யின் விலை இன்று 515 லிருந்து 700 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
மின் கட்டணம் 50 சதவீதம், சொத்து வரி 40 சதவீதம் உயர்ந்ததன் பின்னணி திமுக வழங்கும் மகளிர் உரிமை திட்ட தொகையின் பிரதிபலிப்பாகும். கடந்த 23 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காதவர் பிரதமர் நரேந்திர மோடி. அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே எங்கள் லட்சியம். 2024ல் 400 எம்.பி., தொகுதிகளை பெற்று மீண்டும் 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி அரியணை ஏறுவார்.
மோடியின் தந்தை டீக்கடை வியாபாரி. தாய் ஐந்து வீட்டில் பாத்திரம் தோய்த்தவர். இப்படி கடினமான சூழலில் அரசியலுக்கு வந்தவர் பிரதமர் மோடி. திமுகவில் குடும்ப ஆட்சி மலர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு போதும் குடும்ப ஆட்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.