தமிழகத்தில் சாதி தீண்டாமை இருக்கிறதே, இதுதான் உங்க சமூக நீதியா என்று மாநில அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.
தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் செப்டம்பர் 28, 29 ஆகிய இரண்டு அழகான மற்றும் மறக்க முடியாத நாட்களை நான் கழித்தேன். விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், மரம் மற்றும் பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மண்பாண்ட கலைஞர்கள், கைவினைஞர்கள், விஸ்வகர்மாக்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவன சங்கங்கள், சூரிய சக்தி துறை நிறுவன பிரதிநிதிகள், சமூக தலைவர்களை சந்தித்தேன். மேலும், அறிவாற்றல் சவால்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களை இழந்தவர்கள் மற்றும் அவர்களுக்காகவே அர்ப்பணித்துள்ள ஆசிரியர்கள் சேவையாற்றும் கல்யாணிபுரம் ஔவை ஆசிரமத்தை பார்வையிட்டேன்.
சிவசைலம் கோயிலில் மக்கள் நலனுக்காக வேண்டிக் கொண்டேன். கோவிந்தபேரியில் உள்ள ஸோஹோ கிராமத்தில் ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அவர்களின் துணிச்சலான, தனித்துவமான மற்றும் நம்பிக்கை தரும் பரிசோதனையாக மனித ஆற்றல் உள்ளிட்ட உள்ளூர் வளங்கள், பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் புதுமையான கலவையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் விரிவான கிராமப்புற மறுமலர்ச்சியை பார்வையிட்டேன். நமது நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரன் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி ஆகியோருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். தேசியவாத பெருந்தலைவர் காமராஜருக்கு அவரது நினைவு இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன்.
இந்த பயணம் நமது மக்களுக்கு இருக்கும் விருப்பங்கள், மற்றும் கவலைகள் பற்றிய நேரடி அனுபவத்தை எனக்கு வழங்கியது. நமது விவசாயிகள் அழுத்தத்தில் உள்ளபோதும் கூட ஆர்வமுள்ளவர்களாகவும், நமது கைவினைஞர்கள் கடுமையான தடைகளை எதிர்கொண்ட போதும் கூட லட்சியம் மிக்கவர்களாக உள்ளனர். சிறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்தை விரும்பினாலும் முறைப்படுத்தப்பட்ட தடைகளால் தேங்கியுள்ளன. முக்கிய தொழில்கள் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்கின்றன.
நமது கிராமத்து இளைஞர்கள் இயல்பாகவே அறிவுஜீவிகளாக உள்ளனர். முறையான தகுதிகள் இல்லாவிட்டாலும், அவர்களிடையே சரியான உந்துதலை ஏற்படுத்தினால் ஆக்கபூர்வ மிகுதி மக்கவர்களாக அவர்களால் திகழ முடியும். அத்தகைய சிலரை சோஹோ வில் காணலாம். ஜாதிய பதற்றங்கள் மற்றும் சமூக பாகுபாடுகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலையளிக்கின்றன. அவை சமூக நீதி பற்றிய அதிகாரபூர்வ பிரமாண்ட விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன. இதுதான் சமூக நீதியா ? இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.