தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரி, மதுபான ஆலை, நட்சத்திர ஓட்டல், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தி.நகரில் உள்ள ஓட்டல், வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியில் உள்ள வீடு உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (அக்டோபர் 5) காலை முதல் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் சென்னை வேளச்சேரி, காஞ்சிபுரம், புதுச்சேரியில் உள்ள அவரது மதுபான ஆலைகள் மற்றும் அவர் தொடர்பான அலுவலகங்களிலும் ரெய்டு நடக்கிறது.
ஜெகத்ரட்சகன் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங்கமலை. இவருக்கு புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.