காவிரி விவகாரத்தில் திமுகவின் இரட்டை நிலைப்பாடு: பேரவையில் இருந்து பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

‘‘காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லை எனவும், அதில் காங்கிரஸ் அரசு என்பதற்கு பதில் கர்நாடக அரசு என மட்டுமே இருக்கிறது,  எனவே தமிழகத்தின் நலன் உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்’’ என்று பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) தொடங்கியது. அவை மரபுப்படி காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அப்போது, தீர்மானம் முழுமையானதாக இல்லை எனக்கூறி, பா.ஜ.க., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘கர்நாடகாவுக்கு தமிழக முதல்வர் செல்கிறார். அங்கிருக்கும் தலைவர்களோடு பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். ஆனால் கர்நாடக கூட்டணிக் கட்சியிடம் இருந்து,  தமிழகத்துக்கான சட்டப்பூர்வமான உரிமைகளை,  விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில்  தன்னுடைய செல்வாக்கை, தன்னுடைய நட்பை, தன்னுடைய கூட்டணி பலத்தை பயன்படுத்தி  கர்நாடகாவில் இருந்து நீரைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

நதி நீர் தாவாக்களில் ஒரு நியாயம் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாநிலங்கள் எதுவாக இருந்தாலும், சட்டத்தின்படி, நியாயத்தின்படி, அந்த மாநிலம் அதற்கான நீரை பெற வேண்டும். அதற்காக கொண்டுவரப்பட்ட, மிக முக்கியமான மசோதா அணை பாதுகாப்பு மசோதா.

நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அது குறித்த விவாதத்தின்போது மாநில சுயாட்சி முக்கியம், மாநிலத்தின் அதிகார வரம்பில், சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாதென்று திமுக எதிர்தது. ஆனால் தற்போது கர்நாடகத்திடம் நீரைப் பெற்றத்தர மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே இதை திமுக அரசின் இரட்டை நிலைப்பாடாக நாங்கள் பார்க்கிறோம்.

தன்னுடைய இயலாமையை மறைப்பதற்கும், இரட்டை நிலைப்பாட்டுக்காகவும் இந்த தீர்மானம் முழுமையாக நிரந்தரமான தீர்வை நோக்கி நகராமல் இருப்பதற்கு திமுக, 1972-லிருந்து வரலாற்று ரீதியாக, ஒவ்வொரு முறையும் தமிழகத்தினுடைய நலனை சமரசம் செய்துகொண்டிருக்கிறது

டெல்டா விவசாயிகளின் நலனுக்காக, தமிழகத்தின் நீர் உரிமைக்காக என்றும் நாங்கள் குரல் கொடுப்போம். கடந்த 5 ஆண்டுகாலம், கர்நாடகத்தில், பாஜக ஆட்சியில் இருந்த போது இதுபோன்ற ஒரு சூழல் கூட எழுந்துவிடவில்லை என்பதை தமிழக மக்களுக்கு நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். 5 வருட காலம் பாஜக அரசு இருக்கும்போது இதுபோல எந்த சிக்கலும் வரவில்லை. இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சிக்கல் ஏன் வருகிறது? 

திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக மிகப்பெரிய ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தான் காங்கிரஸ் அரசை என்று குறிப்பிடாமல் மத்திய அரசை வலியுறுத்துவதாக கூறுகிறது..

காவிரி நீரைக் கூட பெற்றுத்தர முடியாத இந்த கூட்டணி பிரதமரை எதிர்க்கிறார்கள்? எனவே, மக்களை ஏமாற்றுகின்ற நாடகமாக இந்த தீர்மானத்தைப் பார்க்கிறோம். எனவே, முதல்வர் கொண்டு வந்த தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லாத காரணத்தால், தமிழகத்தின் நலன் உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்’’ என்று அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top