பங்காரு அடிகளார் மறைவு: திருப்பூரில் நடைபெறவிருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்திவைப்பு!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று (அக்டோபர் 19) இறைவனடி சேர்ந்தார்.  அவரது மறைவு தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவை தொடர்ந்து திருப்பூரில் நடைபெற இருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆன்மிகத்தை அடித்தட்டு மக்களுக்கு அன்னையின் பரிவுடன் வழங்கி, பெண்களுக்கு அன்னையின் கருவறைக்குள்ளே சென்று ஆராதனைகள் செய்யக்கூடிய அருளாசி வழங்கி, நாடெங்கும் சக்தி பீடங்கள், வழிபாட்டு மன்றங்கள் அமைத்து, ஏற்றத்தாழ்வுகள் இல்லாது, சமூகத்தின் எல்லா நிலை மக்களுக்கும் ஆன்மிகத்தின் அமைதியையும் ஆறுதலையும் வழங்கி அன்னையின் அவதாரமாக திகழ்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் நம்மிடையே வாழும் தெய்வத்தின் வடிவாக வாழ்ந்தவர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் பூவுலக நிறைவுச் செய்தியை தொடர்ந்து, அம்மாவின் அவதார வடிவாகத் திகழ்ந்து இறைவன் திருவடி நிழலில் அடைக்கலமாகி இருக்கும் அடிகளாரின் பிரிவு துயர் ஆற்ற இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள்,  அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
ஓம் சாந்தி. 

இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top