சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். அங்கு 90 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சை தலைமையிடமாக வைத்து செயல்படும் மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கிய பிரமுகர்கள் சத்தீஸ்கர் மாநில தேர்தலுக்காக அதிகளவில் பணம் கொடுத்திருப்பதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சத்தீஸ்கர், துர்க் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து வந்த அசிம் தாஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில் 5.39 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கிய பிரமுகர்கள், ‘பாகேல்’ என்ற பெயருடைய அரசியல்வாதியிடம் ஒப்படைக்க, பணம் கொடுத்து அனுப்பியதாக அசிம் தாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு, மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கிய பிரமுகர்கள் இதுவரை 508 கோடி ரூபாய் அளித்துள்ள தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.