சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் கட்டாயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. முதல்கட்டமாக வரும் 7-ம் தேதி 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகியுள்ளனர். பாஜக இந்த முறை அமோக வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 4) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிரதமர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் அரசு உங்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. மகாதேவ் என்கிற பெயரைக்கூட விட்டு வைக்கவில்லை.
2 நாட்களுக்கு முன்பு ராய்ப்பூரில் பெரிய ஆபரேஷன் நடந்தது. அப்போது அதிக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணம் சூதாட்டக்காரர்களுக்கும், பந்தயம் கட்டுபவர்களுக்கும் சொந்தமானது என்று மக்கள் சொல்கிறார்கள். இந்த கொள்ளைப் பணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளை நிரப்புகிறார்கள். இந்த மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட துபாயில் அமர்ந்திருப்பவர்களுடன் சத்தீஸ்கர் மக்களுக்கு என்ன தொடர்பு உள்ளது என்பதை மாநில அரசும், முதலமைச்சரும் சொல்ல வேண்டும்.
பணம் கைப்பற்றப்பட்டது வெளிச்சத்துக்கு வந்ததும் முதல்வர் குழப்பமடைந்திருக்கிறார். எங்கள் தலைவர்கள் மீது பணம் திணிக்கப்படும் என்றும், காவல்துறையை அனுப்புவார்கள் என்றும் உள்ளூர் தலைவர்கள் சொல்வதாக கேள்விப்பட்டேன். காங்கிரஸ் மோடியை இரவு பகலாக திட்டுகிறது. தற்போது முதல்வர் நாட்டின் புலனாய்வு அமைப்புகளையும் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கி இருக்கிறார்.
ஆனால், மோடி முறைகேடுகளுக்கு பயப்படுவதில்லை என்பதை சத்தீஸ்கர் மக்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஊழல்வாதிகளை சமாளிக்க மோடியை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறீர்கள். ஆகவே, சத்தீஸ்கரில் கொள்ளையடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பைசாவிற்கும் அவர்களிடமிருந்து கணக்குக் கேட்கப்படும். சத்தீஸ்கரின் ஊழல் அரசாங்கம் ஒன்றன் பின் ஒன்றாக உங்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது.
மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, இதுபோன்ற ஊழல்கள் குறித்து கடுமையாக விசாரிக்கப்பட்டு, உங்களைக் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் சொல்வதைச் செய்வோம் என்பதுதான் பா.ஜ.க.வின் சாதனை. சத்தீஸ்கர் பா.ஜ.க.வால் உருவாக்கப்பட்டது, சத்தீஸ்கரை பா.ஜ.க. வடிவமைக்கும் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் பொய்கள் பா.ஜ.க.வின் முன் நிற்கிறது. ஊழல் மூலம் தனது கஜானாவை நிரப்புவதே காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை. சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை உள்ள ஏழைகளை காங்கிரஸ் வெறுக்கிறது. ஏழைகள் எப்போதும் தன் முன் நின்று மன்றாட வேண்டும் என்று விரும்புகிறது. எனவே, ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது.
மேலும், ஏழைகளுக்காக மத்திய அரசு தொடங்கும் பணிகளை இங்குள்ள காங்கிரஸ் அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தி தடுக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸின் அநீதியையும் ஊழலையும் பொறுத்துக் கொண்டுள்ளீர்கள். என்னை நம்புங்கள் இன்னும் 30 நாட்களே உள்ளது. அதன் பிறகு இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்” என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.