தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, காவல்துறை அக்கட்சியின் கைப்பாவையாக மாறி உள்ளது. ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும் போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது
அதேசமயம் மாற்று சிந்தனை உடையவர்கள், எதிர்க்கட்சியினர், மாற்று சித்தாந்தங்களை பின்பற்றுபவர்களின் ஜனநாயக உரிமைக்கு கூட முட்டுக்கட்டை போடுகிறது.
அதிகாரம் கையில் இருக்கும் நிலையில் அதனை தங்கள் இஷ்டத்துக்கு திமுக அதிகார வர்க்கத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் திமுகவின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துக்கும், நீதிமன்றம் சரியான பதிலடி தந்து வருகிறது.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி வழங்கிய திமுக அரசு, திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தியது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடியாக சில விஷயங்களை கூறினார்.
சனாதான ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது ஜாதி மதம் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படுத்தாதவாறு பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி மீதும், அமைச்சர் சேகர் பாபு மீதும் தமிழ்நாடு பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை காலம் தாழ்த்தி வருகிறது. உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு பிறகாவது இந்த விவகாரத்தில் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்தக் கருத்தால் திமுக அரசு அவமானப்பட்டு நின்று கொண்டிருந்த அதே தருணத்தில், மற்றொரு அடியை பலமாக உச்ச நீதிமன்றம் திமுக அரசுக்கு கொடுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவம்பர் 15ம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் அளிக்கும் பேரணி தேதி வழித்தடம் தொடர்பாக அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதில் வாங்கிய அடி தெளிவதற்குள் அடுத்த பலமான அடியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிவைஸ் சந்திர சூட் கொடுத்துள்ளார். ஒரே நாளில் நீதிமன்றங்களில் திமுக வாங்கிய மூன்றாவது அடி இது..
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வேலூர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கை தானாக முன்வந்து விசாரித்து வருகிறார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வாறு விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் பொன்முடியின் மனுவை டிஸ்மிஸ் செய்தார். மேலும் ஆனந்த வெங்கடேஷ் போன்ற ஒரு சில நீதிபதிகள் இருப்பது தான் நீதித்துறைக்கு பெருமை என்றும் அவரை தான் மனமார பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒரே நாளில் உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் திராவிட மாடல் அரசை சொல்லி சொல்லி அடித்துள்ளனர். அதிகாரம் கையில் இருக்கிறது என்கிற மமதையில், சட்டத்தை மதிக்காமல் தனது விருப்பத்திற்கு ஏற்ப காவல்துறையையும் மற்ற அரசு துறைகளையும் ஆட்டுவித்தால் இது போன்ற அவமானங்களை தொடர்ந்து சந்திக்க வேண்டியது இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பா.நாகராஜ்