வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத அடாவடி திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் பயணம் மூலம் மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களை நேரடி சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த பயணத்தின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் அடங்கிய பிரசுரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று (நவம்பர் 8) திருச்சி மாவட்டத்தில் பயணத்தை தொடர்ந்துள்ளார். இந்த பயணம் தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.
இன்றைய என் மண் என் மக்கள் பயணம், சங்க காலத்தில் இருந்து நிகழ்காலம் வரை ஆன்மீகம், வீரம், பாதுகாப்பு, அரண் என அனைத்துத் தளத்திலும் மையப்புள்ளியாக, என்றுமே பாரதத்தின் அதிகாரத்தை முடிவு செய்யும் இடமாக, மலைக்கோட்டை அமைந்திருக்கும் திருச்சியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட பொதுமக்கள் சூழ வெகு சிறப்பாக நடந்தேறியது.
திருச்சிக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் பற்றி விவரிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச் செய்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் ஆண்ட மண். வாஞ்சிநாதனுக்கு குரு, பாரதியாருக்கு நண்பர், வஉசி அவர்களின் வழக்கறிஞரான வ.வே.சு ஐயர் பிறந்த மண். அளப்பறியா தமிழ் தொண்டுக்கு சொந்தக்காரர், தமிழிசை இயக்கத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரப்பிய கி.ஆ.பெ அவர்கள் பிறந்த மண். தமிழகத்தின் இரு மொழி கொள்கையால் தமிழ் வளரவில்லை என்பதை அறிந்து, மும்மொழிக் கொள்கை வந்தாலும் தவறில்லை ஆனால் தமிழை கட்டாய பாடம் ஆக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர். கி.ஆ.பெ அவர்களின் கோரிக்கையை நமது பாரத பிரதமர் நிறைவேற்றியிருக்கிறார். 5ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தாய் மொழியை கற்கவேண்டும் என்று 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கல்வி கொள்கை தெரிவிக்கிறது.
திருச்சியின் வரலாற்றை யார் எழுதினாலும் பி.ஆர்.தேவரைச் சொல்லாமல் எழுதினால் அந்த வரலாறு முழுமையடையாது. தன் குடும்பத்தின் சொத்தினைத் திருச்சி மக்களுக்கும் விடுதலைப்போருக்கும் வழங்கியவர் பி.ரத்தினவேல் தேவர் அவர்கள். திருச்சியின் தாகம் தீர்த்த தலைவர் என்று போற்றப்படுபவர். திருச்சி நகராட்சியின் வரலாற்றில் 5 முறை தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் 6 மாதங்கள் நகராட்சி நிர்வாகத்தை நடத்திய ஒரே தலைவர் பி.ஆர்.தேவர்தான்.
மாமன்னன் ராஜராஜ சோழனால் வெட்டப்பட்டது திருச்சியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால். தொடர்ந்து கழிவு நீரை அங்கே கொட்டுவது மற்றும் ஆக்கிரமிப்புகளால், தென் தமிழகத்தில் தாமிரபரணி, கொங்கு பகுதியில் நொய்யல், சென்னையில் கூவம் போல் திருச்சியின் உய்யக்கொண்டான் வாய்க்காலை சீரழித்து விட்டனர்.
திருச்சி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு 4,591 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு 951 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 1,548 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 1151 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. 45,376 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலம் வீடு, 3,94,338 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,02,252 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,35,861 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 97,097 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,47,248 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், திருச்சி மாவட்டத்திற்கு முத்ரா கடன் உதவி 8,018 கோடி ரூபாய். இவை திருச்சி மாவட்டத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்கள்.
கடன் தொகையினை ஈடுகட்ட, நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில், அடமான சொத்தை ஐப்தி செய்ய சென்ற துணை வட்டாட்சியர் மீது, அமைச்சர் நேருவின் வலதுகரமான பகுதிச் செயலாளர் உள்ளிட்ட நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நேரு ஒருத்தர் தான் பணக்காரராக இருக்கணும் என்று இவரது சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி புலம்புகிறார். அரசு அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை, கட்சி தொண்டர்களை அடிப்பது என்று ரொம்ப பிஸியாக இருக்கிறார் குறுநில மன்னர் நேரு. இதற்கிடையில், துறை பணிகளை எப்படிக் கவனிப்பார்?
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத அடாவடி திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.