சென்னை, அமைந்தக்கரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தை தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
முன்னதாக சிறப்பு பூஜைகளுடன் பா.ஜ.க., கொடியேற்றி வைத்து தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். அதில் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.
தென் சென்னை, வட சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன. தேர்தல் அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இணையதள வசதி, கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உட்பட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். முழுவதுமாக நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்த அலுவலகத்தில் தான் பாஜக சம்பந்தப்பட்ட அனைத்து ஆலோசனை கூட்டங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய தலைவர் அண்ணாமலை;
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் பணி மனை மூத்த தலைவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
மிக முக்கியமான நிகழ்வு வருகின்ற பிப்ரவரி 11ம் தேதி என் மண் என் மக்கள் யாத்திரை 200 தொகுதியாக சென்னைக்கு இன்று 183 தொகுதிகளை கடந்திருக்கிறோம்.
பிப்ரவரி 11ம் மாலை மாபெரும் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் பங்கேற்க உள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரையின் 234வது தொகுதியின் நிறைவு விழா பிப்ரவரி 25ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்கிறார்.இதற்காக பல்லடத்தில் 530 ஏக்கரில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் 5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளது. 10 லட்சம் பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பங்கேற்கக்கூடிய என் மண் என் மக்கள் நிறைவு விழா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தலைவர் கூறினார்.