நாடாளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் ஒருமித்த கருத்தோடு, மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று தேனி எம்.பி., ரவீந்திரநாத் பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையுடன் அவை கூடியது. இடைக்கால பட்ஜெட் கடந்த 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 05) நாடாளுமன்றத்தில் பேசிய தேனி எம்.பி., ஓபி ரவீந்திரநாத் பேசியதாவது:
நான் பாராளுமன்ற உறுப்பினராக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த தருணத்தில் எங்கள் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது என்னை பேச அனுமதியளித்த சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது தேனி தொகுதி வெற்றிக்கு காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
17வது லோக்சபா சபையின் கடைசி கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் முறையாக ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றியது வரலாற்று சாதனை. ஒரு பழங்குடியினர் சமூகத்தினருக்கு இந்த வாய்பை கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. பாஜக அரசு 3 ஜனாதிபதிகளை கொடுத்துள்ளது.
ஒருவர் சிறுபான்மை சமூகத்தினர். ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். ஒருவர் பழங்குடியின சமூகத்தினர். சுதந்திர இந்தியாவில் இத்தகைய சமூகத்தினருக்கு இப்படி ஒரு வாய்ப்பினை எந்த அரசாங்கமும் தரவில்லை என்பதை இங்கு பதிவு செய்கிறேன். அதுபோல இந்த புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு உரை நிகழ்த்துவதற்கு உள்ளே வரும் போது அவருக்கு முன்பாக தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட செங்கோல் வந்தது தமிழகத்திற்கு தமிழக கலாசாரத்திற்கு பெருமையான ஒன்றாகும்.
இதுவரை ஐநா சபையில் பேசிய பிரதமர்களில், தமிழில் பேசிய ஒரே பிரதமர் நமது பிரதமர் மோடி தான். தமிழர் பெருமைகளை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தவர் பிரதமர் மோடி தான். மேக் இன் இந்தியா மூலம் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் மோடி.
2014 ஆம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக இந்தியாவில் புதிய பாதையை அமைத்து அடுத்த கட்ட வளர்ச்சிக்காக வல்லரசு நாடாக நமது இந்தியா வளர்வதற்கு அடித்தளம் போட்டிருக்கிறார் பிரதமர் மோடி. வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், இந்திய மக்கள் ஒருமித்த கருத்தோடு, 3வது முறையாக பிரதமர் மோடியை இந்தியாவின் பிரதமராக ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.