நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரிப்பது மட்டுமல்ல, தமிழகத்திலிருந்து பாஜக எம்.பி.க்களை வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி சாதனை இம்முறை பாஜக சாதனை படைக்க உள்ளோம் என தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கத்தில் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர், தனியார் பல்கலை வளாக அரங்கில், பாஜக நாடாளுமன்றத் தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் நேற்று (பிப்ரவரி 11) நடந்தது.
அதில், தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சட்டசபை பா.ஜ.க., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உட்பட 3,000 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
காங்கிரசின் 60 ஆண்டு கால ஆட்சியில் செய்த தவறுகளை பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் சரி செய்துள்ளோம்.
காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சியில் நிதிநிலை எப்படி இருந்தது என்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 11.11 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நம் மீது திமுகவினர், மாநிலங்களுக்கான நிதி பகிர்வை குறைத்து விட்டதாக கூறுகின்றனர். இதை தீவிரமாக எதிர்க்க வேண்டியது பாஜகவினரின் கடமை. உண்மையை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். வடக்கு, தெற்கு என்று பிரிவினை பேசக்கூடியவர்களின் கடைசி தேர்தலாக 2024 தேர்தல் இருக்க வேண்டும்.
அடுத்த 60 நாட்களுக்கு களத்தில் வீரமான செயல்களை செய்வதுடன் திமுக பொய்களை கூறியதும் உடனே உடைக்க வேண்டும். ஒரு பொய்யை இரு நாட்கள் விடக் கூடாது; அப்படி விட்டால் அதை உண்மையாக மாற்றக்கூடிய திறன் திமுகவுக்கு உள்ளது.
மக்கள் இந்த தேர்தலில் மாற்றுக் கட்சி தொண்டர்களாக இருந்தாலும் மோடிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் என்பது அடிப்படை உண்மை.
அனைத்து மக்களிடமும் பாஜகவின் ஆட்சியின் சாதனைகளை தெரிவிக்க வேண்டும். மக்களை சந்தித்து நாம் வாக்கு கேட்கவில்லை என்ற குறை இருக்கக்கூடாது.
கட்சியினர் வீடு வீடாக ஏறி இறங்கி, மோடியின் சாதனைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம், அயோத்திக்கு ரயிலில் சென்றவர்களை சந்தித்து நட்பு பாராட்ட வேண்டும்.
மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். கட்சியினர், பொதுமக்கள், சமூக தலைவர்களை சந்திக்க வேண்டும். யாருக்கும் காத்திருக்கக் கூடாது.
ஒரு நாளை கூட வீணாக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் கட்சி வேலையை தவிர வேறு எந்த வேலையும் செய்யவில்லை வாக்கு சேகரிக்க உழைத்திருக்கிறோம் என்று நோட்டில் எழுத வேண்டும். இந்த நேரம், இந்த சூழல், இந்த காலம், மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லை.
இந்த முறை, பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரிப்பது மட்டுமல்ல; நாம் எம்.பி.,க்களை வென்று நாடாளுமன்றத்திற்கு அனுப்பி சாதனை படைக்க உள்ளோம்.
கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று ஒரு நாள் இரவு தங்க வேண்டும்; அங்குள்ள மக்களிடம் ஒரு மணி நேரம் பேச வேண்டும்.
பிப்ரவரி 25ல் நடக்கும் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை வைத்து பாஜகவிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை மதிப்பிட முடியும். இது தேர்தலுக்கு முன் நடக்கக்கூடிய ஒரு தேர்வு. இவ்வாறு அவர் பேசினார்.