ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, பா.ஜ.க. தலைமை இன்று அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்தும், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முனைவர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்தும் போட்டியிட உள்ளனர்.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 56 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவிக்காலம் இந்த மாதம் நிறைவடைகிறது. இதற்காக வரும் பிப்ரவரி 27 ல் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் இன்று (பிப்ரவரி 14) வெளியிடப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட இந்த பட்டியலில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்தும், எல்.முருகன் ம.பி.,யில் இருந்தும் போட்டியிட உள்ளனர். மேலும் ம.பி.,யில் இருந்து உமேஷ் நாத் மஹாராஜ், மாயா நரோலியா, பென்சிலால் குர்ஜார் ஆகியோரும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.