கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு 26ம் ஆண்டு புஷ்பாஞ்சலி! அண்ணாமலை பங்கேற்பு!

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று, 26வது ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி இன்று மாலை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் அண்ணாமலை பங்கேற்று உயிரிழந்தவர்கள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த 1998 பிப்ரவரி 14 அன்று, கோவை நகரில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் மோட்சதீபம் ஏற்றி புஷ்பாஞ்சலி நடத்துவது வழக்கம்.

இந்த துயர சம்பவம் நிகழ்ந்து, இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள கே.ஆர்.பேக்கரி முன்பாக இன்று மாலை 3:30 மணிக்கு தீபாஞ்சலி மற்றும் மோட்சதீப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகளும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.

இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கலை சபாபதி, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் விவேகானந்தர் பேரவை, பாரத்சேனா, அனுமன்சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்று புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி விட்டு மேடையில் பேசிய தலைவர் அண்ணாமலை;

இந்தியாவையே உலுக்கிய, கோவை தீவிரவாத தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்து, இன்றோடு 26 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும், இன்றும் அதன் தாக்கம், தமிழக மக்களின் மனதில் ஆறாத வடுவாய், அழியாத ரணமாய் உறைந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, கோவை குண்டு வெடிப்பில் தங்கள் இன்னுயிரை நீத்த 58 அப்பாவிப் பொதுமக்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செய்தோம்.

தமிழகத்தில் மேலும் ஒரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள, தமிழக மக்கள் மனதளவில் கூடத் தயாராக இல்லை.ஆனால், ஆட்சியில் இருக்கும் திமுக, பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், தீவிரவாதிகளைக் காப்பாற்றும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை, பொதுமக்கள் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதெல்லாம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஏற்ற இடமாக, சொர்க்கபுரியாகவே இருந்து வருகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு, முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலையை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி, விடுதலைப் புலிகள் அமைப்பைத் தமிழகத்தில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் என்றும், காவல்துறையினரை, விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியிருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. விளைவு, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். திமுகவுடன் இன்று கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் இவை மறந்திருக்கலாம். ஆனால், பொதுமக்கள் மறக்கவில்லை.

1998 ஆம் ஆண்டு, இதே பிப்ரவரி 14 அன்று, பாரத ரத்னா திரு. அத்வானி அவர்கள் பேசவிருந்த பொதுக்கூட்ட மேடையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வெடிகுண்டு வெடித்து, பின்னர் கோவையில், உக்கடம், காந்திபுரம், ரயில்வே சந்திப்பு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எனத் தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக, 58 உயிர்களை இழந்தோம். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதிகள் 9 பேரை, கடந்த 2009 ஆம் ஆண்டு, அண்ணாதுரை நூற்றாண்டு விழா என்று கூறி விடுதலை செய்த திமுக, தற்போது, முக்கியத் தீவிரவாதி பாஷா உட்பட மீதமிருக்கும் 16 பேரையும் விடுதலை செய்யத் துடிக்கிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம், இவர்கள் செய்த குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து, உச்சநீதிமன்றம், இவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக் கூட மறுத்தது. ஆனால், தேர்தலுக்கு முன்பாக இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக துடிப்பதன் நோக்கம் என்ன?

கடந்த 2022 ஆம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து, பலரைக் கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்த பிறகும், இன்றளவும், சிலிண்டர் வெடிப்பு என்று கூறி வரும் திமுக, தமிழகக் காவல்துறை மீதும் அழுத்தம் கொடுத்து அவ்வாறே சொல்ல வைத்திருக்கிறது. கோவையில் இது போன்ற தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தேசிய உளவுத் துறை எச்சரிக்கை செய்தும், அதனைக் கண்டுகொள்ளாமல், நிர்வாகத்தில் முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறது திமுக அரசு. பல்வேறு வெடிபொருள்கள், ISIS தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் என அனைத்தும் வெளிப்பட்ட பிறகும், எதற்காக சிலிண்டர் வெடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக?

நேற்றைய தினம், தமிழகத்தில் 12 இடங்களில், NIA சோதனை நடத்தியதில், அரபிக் வகுப்புகள் என்ற பெயரில் தீவிரவாதப் பயிற்சிகள் தமிழகத்தில் அளிக்கப்பட்டு வருவது வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது. சென்னை மற்றும் கோவையில் அரபிக் கல்லூரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக உளவுத் துறை முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளதால், தமிழகத்தில் பல முறை NIA சோதனைகள் நடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், திமுக இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், சமூக வலைத்தளங்களில் செயல்படும் பாஜகவினரைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறது.

மத்தியில் கடந்த 2004 – 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, நாடு முழுவதும் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து வந்ததை நாம் அறிவோம். நூற்றுக்கணக்கான பொதுமக்கள், நாடு முழுவதும் தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பலியாகினர். கடந்த 2014 ஆம் ஆண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திருநரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவினுள் எங்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழாமல் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. எல்லையில் நடைபெறும் கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு, அவர்கள் இடத்திற்குச் சென்றே பதிலடி கொடுத்து, அவர்கள் இருப்பையே அழிக்கும் ஆண்மையுள்ள ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீவிரவாதம் என்பது அனைவருக்கும் எதிரி என்பதை இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பாஜக ஆட்சியில்தான் நாடு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

திமுகவைப் போலவே, பங்காளிக் கட்சியும், தீவிரவாத இயக்கமான PFI இயக்கத்துடன் தொடர்புடைய SDPI உடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். PFI தீவிரவாத இயக்கம் இதுவரை தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் பல பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் படுகொலை செய்ததோடு வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசித் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இவர்கள் அனைவரின் நோக்கம், பொதுமக்கள் பாதுகாப்பை அடகு வைத்தாவது அதிகாரத்தை அடைய வேண்டும் என்பது மட்டும்தானே தவிர, மக்கள் நலன் அல்ல. இதைக் கருத்தில் கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் நமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top