பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்படும் ,ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக ,திமுக அரசின் கூற்று முழுக்கப் பொய்யானது என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
திமுக அரசு கூறுவதை உண்மை என்று முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும், தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பாளர் என்று கூறிக்கொள்பவர் கூற்றைச் செய்தியாக்க, கோபாலபுரம் ஊடகம் களமிறங்கியதிலும் தவறான செய்தி வெளியிட்ட பின்பு அந்த பதிவை நீக்கியதிலும் ஆச்சரியமில்லை. எனவே, இங்கே சில உண்மையான ஆதாரங்களை முன்வைக்கிறோம்:
1) PMAY-U கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, வட்டி மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு, அதிகபட்ச வட்டி மானியம் ₹2.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
2) 2016-17 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கிடையே, PMAY-G திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியது ரூ. 5541 கோடி ஆகும். இந்த ஆண்டுகளில், இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பயன்படுத்திய மொத்த நிதி ₹6921 கோடி.
ஒட்டுமொத்தப் பயன்பாட்டில், PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஆன மொத்த செலவில், மத்திய அரசு 80% செலவிட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
3) இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால், எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டு 2022-23ஐ உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மத்திய அரசின் பங்கு: ₹2004.39 கோடி மொத்தப் பயன்பாடு (மாநிலப் பங்கு உட்பட): ₹2290.47 கோடி.
தமிழக அரசின் பங்கு ₹286.08 கோடி எனத் தெரிகிறது. ஆனால், தமிழக அரசின் செலவீட்டுப் பட்டியலில் வேறுவிதமாக இருக்கிறது.
கடந்த 2022-23 நிதியாண்டில், ரூ.555.89 கோடி செலவழித்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. இது உண்மையாகச் செலவிட்ட நிதியை விட ₹269.81 கோடி அதிகமாகும். இதைக் குறித்து தணிக்கை அதிகாரிகள் கேட்கும்போது, தமிழக அரசு பதில் கூறிக்கொள்ளட்டும்.
சுருக்கமாகக் கூறினால், PMAY-G திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழக அரசின் கூற்று முழுக்கப் பொய்யானது.
உண்மைச் சரிபார்ப்புக் குழு என்று அழைத்துக் கொள்ளும் தமிழக அரசு நியமித்துள்ள குழு, தன்னை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்றே அழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.