குஜராத்தில் உள்ள புண்ணிய பூமியான துவாரகைக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு துவாரகை நகரம் நீரில் மூழ்கியுள்ள ஆழ்கடலுக்கு சென்று ,மயில் இறகை வைத்து வழிபாடு நடத்தினார்.
குஜராத் மாநிலத்தின் மிகவும் பழமையான மற்றும் அழகான நகரம் என சொல்லப்படும் துவாரகை எப்படி மூழ்கியது என்பதைப் பார்க்கலாம். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இந்த துவாரகையில் வாழ்ந்து ஆட்சி செய்தார். இந்த நகரம் 3500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என கூறப்படுகிறது.
தாய்மாமன் கம்சனை மதுராவில் வதம் செய்த பிறகு துவாரகாவில் முடி சூடிக் கொண்டார் கிருஷ்ணன். கலி காலத்தின் போது கிருஷ்ணர் பூமியை விட்டு ஆன்மிக உலகிற்கு சென்றதால், இந்த நகரம் கடலில் மூழ்கியதாக சொல்லப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி உருவானது அல்லவா, அது போன்றதொரு கடல் சீற்றம் உருவாகி துவாரகை நகரம் மூழ்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
குஜராத்தில் துவாரகா நகரில் துவாரகாதீஷ் கோவில் அமைந்துள்ளது. இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. அரபிக் கடலில் மூழ்கிய துவாரகா நகரம் குறித்து 1930 ஆம் ஆண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1960 ஆம் ஆண்டுக்கு பிறகு துவாரகா நகரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது 500க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை கடலுக்கு அடியில் துவாரகா நகரம் குறித்து ஆய்வு நடத்தியது. அப்போது கடலுக்கு அடியில் கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப் பெரிய துறைமுகமாக துவாரகா இருந்ததை காட்டும் வகையில் நங்கூரங்களும் கிடைத்தன.
பிரம்மாண்ட சுவர், வட்ட வடிவிலான கற்கள், வெண்கலம், செம்பு, இரும்பு, மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்த போது, சுமார் 7500 ஆண்டுகள் முதல் 9 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
அரபிக் கடலில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரை பார்வையிட, சிறப்பு நீர் மூழ்கி கப்பலை தயாரிக்க ,மும்பையை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதாக குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நீர் மூழ்கிக் கப்பலில் ஒரே நேரத்தில் 30 பேர் பயணம் செய்யலாம், 24 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் இரு மாலுமிகள், இரு நீச்சல் வீரர்கள், ஒரு வழிகாட்டி, ஒரு டெக்னீசியன் ஆகிய 6 பேர் பயணம் செய்வர்.
அந்த கப்பலில் அவசர கால தேவைக்கான மருந்துகள், ஆக்ஸிஜன் மாஸ்க், ஸ்கூபா உடைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் கவசங்களும் இருக்கும். கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்கும் அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகளும் அமைக்கப்படும். கடலுக்கு அடியில் 300 அடி ஆழத்தில் இந்த நீர் மூழ்கிக் கப்பல் பயணம் செய்யும். கண்ணாடி ஜன்னல்கள் மூலம் துவாரகையின் அழகு மட்டுமின்றி, கடல் வாழ் உயிரினங்களையும் சுற்றுலா பயணிகள் ரசிக்கலாம். இந்த திட்டம் தொடங்கப்பட்டால் சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கிய துவாரகை நகரத்தை பார்வையிடுவார்கள்.
இந்துக்களின் மிக தொன்மையான நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ள உதவும் நகரமாக துவாரகை விளங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.