‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் வெற்றி.. தலைவர் அண்ணாமலை நன்றி!

நமது என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின் வெற்றிக்குப் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (பிப்ரவரி 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சி சாதனைகளை, தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் விதமாக, தமிழக பாஜக சார்பில், என் மண் என் மக்கள் நடைப் பயணம், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களால், ராமேஸ்வரம் மண்ணில் தொடங்கி வைக்கப்பட்டது.

கடந்த ஏழு மாதங்களாக, தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பயணம் செய்திருக்கிறோம். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ஊழலையும், ஒரு குடும்பத்தையும், அடாவடித்தனத்தையும், லஞ்ச லாவண்யத்தையும் மட்டுமே முன்னிறுத்திய தமிழக அரசியலில், பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசியல் சாத்தியம் என்பதை, நமது பாரதப் பிரதமரின் பத்தாண்டு கால நல்லாட்சி நிரூபித்திருக்கிறது. அதன் நேர்மறை விளைவே, நமது என் மண் என் மக்கள் நடைபயணம் செல்லும் இடங்கள் எல்லாம், ஏழை எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பு மக்களும், தங்கள் பேராதரவை, மகிழ்ச்சி ஆரவாரத்தோடு, உற்சாக வரவேற்போடு வெளிப்படுத்தி, நமது பயணத்தை, இன்று ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறார்கள்.

நமது இந்த ஏழு மாதப் பயணத்தில், திமுக அரசால் பல தடைகளை எதிர்கொண்டோம். பழிவாங்கும் நோக்கத்தோடு, நமது நிர்வாகிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. வீண் பழிகள் சுமத்தப்பட்டன. கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளானோம். ஆனால் நமது நோக்கம் மிகப்பெரியது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீது பொதுமக்களும், நமது கட்சி சகோதர, சகோதரிகளும் கொண்டுள்ள பேரன்பு, எவராலும் தடுக்கவோ, மறைக்கவோ முடியாதது என்பதை, திமுக விதித்த அத்தனை தடைக்கற்களையும் உடைத்தெறிந்து, இன்றைய தினம் நடைப்பயண நிறைவு விழாவில், நமது பிரதமர் அவர்களுக்கு நமது பயணத்தின் வெற்றியை நேரில் அர்ப்பணித்து நிரூபித்துள்ளோம்.

கடந்த ஏழு மாதங்களாக நாம் மேற்கொண்ட இந்த பயணத்தில் பல்வேறு பருவநிலைகளை எதிர்கொண்டுள்ளோம். கொட்டும் மழை, கடுங்குளிர், சுட்டெரிக்கும் வெயில் என பல்வேறு சூழல்களிலும், சற்றும் பின்வாங்காது. தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறோம். எதிர்பாராவிதமாக, சென்னை மாநகரமும், தென் மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளாகிய நேரத்தில், அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்வதற்காக, நடைபயணத்திற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த சில தொகுதிகளில், நமது பயண தேதியை மாற்றி அமைக்கவும் நேரிட்டது. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, நமது குறிக்கோளான, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதி மக்களையும் நேரில் சந்திப்பது என்பதில் நாம் நிச்சயமாக வெற்றி கண்டுள்ளோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில், ஒரு நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக வேண்டும். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் நம் தமிழக மக்கள் அனைவருக்கும் தடையின்றிக் கிடைக்க வேண்டும். ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல், கடைக்கோடி மக்களுக்கும் அனைத்தும் சமமாகச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக, தங்கள் சுக துக்கங்களை மறந்து, நம் மக்களுக்காக, நமது நாட்டுக்காக என தன்னலமின்றிச் செயல்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இந்த நேரத்தில் எனது உள்ளம் நிறைந்த நன்றிகளைத் காணிக்கையாக்குகிறேன்.

தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் நமது என் மண் என் மக்கள் நடைபயணம் செல்வது என்பது அத்தனை எளிதான பணி இல்லை. சரியான திட்டமிடல், முறையான தகவல் பரிமாற்றம், தெளிவான ஒருங்கிணைப்பு என ஒரு மகத்தான சாதனைப் பயணத்தை நமது பாஜக சகோதர, சகோதரிகள் சாத்தியமாக்கிருக்கிறார்கள். கட்சிப் பணி என்பதைத் தாண்டி, தேச நலனுக்காக நமது குழந்தைகள் எதிர்காலத்துக்காக, நமது இளைஞர்கள் நல்வாய்ப்புகளுக்காக என, ஒவ்வொருவரும் மனப்பூர்வமாகச் செயலாற்றியதால் மட்டுமே நமது என் மண் என் மக்கள் பயணத்தின் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

சில சட்டமன்றத் தொகுதிகளில், பல காரணங்களால், திட்டமிட்ட நாளில் நமது பயணம் நடைபெறாமல் வேறு நாளுக்கு மாற்றி வைக்கப்பட்டாலும், சற்றும் மனங்கோணாது. அதே எழுச்சியுடன், அதே உற்சாகத்துடன், அதே ஆரவாரத்துடன் வரவேற்பளித்த நமது சகோதர, சகோதரிகளின் அன்பு எப்போதுமே ஒரு உந்து சக்தியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இன்றைய நிறைவு விழாவில், நமது என் மண் என் மக்கள் நடைபயணம், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று, மேடையில் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் பெருமையும், புகழும் உங்கள் ஒவ்வொருவரையுமே சேரும். நமது கட்சியின் ஆற்றல்மிகு ஒன்றிய நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், நமது மூத்த தலைவர்கள், நடைபயணப் பொறுப்பாளர்கள், இவர்கள் அனைவரோடு, ஒவ்வொரு தொகுதியிலும் பெரும் திரளெனக் கூடி பேரன்பை வெளிப்படுத்திய பொதுமக்கள் அனைவருமே இந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் ஆவர். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களில் ஒருவனாக, உங்கள் சகோதரனாக எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது பயணம் மட்டுமே தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவருக்குத் துணையாக, நம்மில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பும் வரை, நமது பயணம் ஓயப் போவதில்லை.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top