பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க நிதி அளித்த ஜாபர் சாதிக்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை!

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்காக அரபிக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நிதி உதவி அளித்தனரா என்பது பற்றி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவராக செயல்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் உள்ளிட்டோரையும் டெல்லியைச் சேர்ந்த மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் வெளிநாடுகளுக்கு தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக் கணக்குகள், முகமது சலீம் மற்றும் மைதீனின் ஆறு வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்க மூவரும் நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த 2022ல் குண்டு வெடிப்பு நடத்திய ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் உயிரிழந்தான். அவனது தலைமையில் 12க்கும் மேற்பட்டோர் தற்கொலைப் படையினராக மாறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டது. அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில் மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு சென்னை, கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக அரபிக் கல்லூரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் சில பணப் பரிவர்த்தனைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அவை பற்றிய விபரத்தை டெல்லியை சேர்ந்த மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தோம்.

அவர்கள் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, பணப் பரிவர்த்தனை குறித்து நாங்கள் கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.

அதில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்க, ஆயுதப் பயிற்சி அளிக்க நிதியுதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு  புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top