‘‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்காமல் வன்னியர்களுக்கு தி.மு.க., துரோகம் செய்து விட்டது’’ என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், ஓ.பி.சி., வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு, சமூக நீதி வரலாற்றில் மிகப்பெரிய மைல் கல்லாக போற்றப்படுகிறது.
இதையும், தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சேலம் ரயில்வே கோட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தது, தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தான் என்ற இமாலயப் பொய்யை தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது.
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தைக் கட்டியெழுப்பி திறப்பு விழா நடத்தியதும், அதன் மருத்துவமனைக்கு அயோத்திதாசப் பண்டிதரின் பெயரைச் சூட்டியதும் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த நான் தான்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்காமல், வன்னியர்களுக்கு துரோகம் செய்த தி.மு.க.,வுக்கு சமூக நீதி குறித்து பேச எந்த தகுதியும் இல்லை.
பா.ம.க.,வின் சாதனைகளை தன்னுடையதாகக் கூறி அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க.,வுக்கும், இன்னொரு உயிரினத்தை சார்ந்து அதன் உணவை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
செய்யாததை செய்ததாக போலி பெருமை பேசுவதற்கு தி.மு.க., வெட்கப்பட வேண்டும். இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.