‘‘ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி, தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, யுபிஎஸ்சி, அல்லது முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா? குறைந்தபட்சம் குரூப் 4 தேர்விலாவது தேர்ச்சி பெற முடியுமா? ’’ என கேள்வி எழுப்பி உள்ளார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஆளுநரை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்று பேசிய உதயநிதிக்கு இது செருப்படி கேள்வி என்கிறார்கள் பாஜகவினர்.
நேற்றைய தினம் ( 22.08.2023 ) திருநெல்வேலியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய போது அண்ணாமலை இந்தக் கேள்வியை எழுப்பினார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது : ‘நீட்’ தேர்வு பற்றி திமுகவிற்கு வன்மம் இருக்கிறது. நீட் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து வருகின்றனர். முந்தைய ஆண்டுகளை காட்டிலும் தற்போது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தங்களது கட்சியின் கொள்கையை அரசில் திணிக்கின்றனர். நீட் தேர்வில் திமுகவினர் இடியாப்ப சிக்கலில் உள்ளனர். புள்ளி விபரங்களின் படி பார்த்தால் நீட் தேர்வு மிகவும் நல்லது. இதன் காரணமாகவே திமுக உண்ணாவிரதத்திற்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் யாருமே செல்லவில்லை. வெறும் அவர்களின் கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு போலீயான உண்ணாவிரதத்தை அவர்கள் மேற்கொண்டனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். நான் சொன்னால் நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை. உதயநிதி தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு யுபிஎஸ்சி முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறட்டும். நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். குறைந்த பட்சம் சாதாரண டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்விலாவது தேர்ச்சி பெறட்டும். உதயநிதி பொது மேடைகளில் எப்படி பேச வேண்டும் என பெரியவர்களிடம் கற்றுக் கொள்வது நல்லது.
நீட் விவகாரத்தில் ஜனாதிபதி இறுதி முடிவு எடுத்து தள்ளுபடி செய்தால் திமுக அவரையும் தமிழகத்தில் வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் எனச் சொல்லுமா ? இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறீர்கள் ?
அரசியல் சட்டப்படி நீட் தேர்வை நீக்க முடியாது. புரிதல் இல்லாமல் திமுகவினர் பேசி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் நீட் தேர்வு நீக்கப்படும் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும். மறுபடி வரவுள்ள 2024ல் மோடி பிரதமராக வருவார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.