நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தே திமுகவினர் வேண்டும் என்றே பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டும் ஓடிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்வது என்பது இயலாதது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்ற பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து, மாவட்ட தலைநகரங்களில் அவர்களின் கட்சியை சேர்ந்த சிலரை கூப்பிட்டு வச்சி நாடகத்தை அரங்கேற்றினர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கண்டபடி பேசினார். அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்தவர் போன்று பேசாமல் மிகவும் அநாகரிகமான முறையில் பேசினார். அதுவும் ஆளுநர் ரவியை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்றெல்லாம் பேசினார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் இவர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 23) எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மீது புகார் அளித்துள்ளார்.
அதில், கடந்த 20ம் தேதி ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதியின் பேச்சு ஆளுநருக்கு எதிராக தமிழக மக்களை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் உள்ளது.
மாநில அமைச்சராக தான் எடுத்துக் கொண்ட பதவி பிரமாணத்தை அவர் மீறியுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.