திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நேற்று (டிசம்பர் 12) தரிசனம் செய்ய வந்த வெளிமாநில ஐயப்ப பக்தர்களை அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் காவலர்கள் தாக்கியதில் பக்தர்களுக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டன. பலர் படுகாயமடைந்தனர். இது பற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆந்திராவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இன்று காலை (டிசம்பர் 12) ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள், நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில், வேண்டிய சிலரை மட்டும் ஊழியர்கள் தரிசனத்துக்கு உள்ளே அனுப்பியபடி இருந்துள்ளனர். இதை கேட்ட பக்தர்கள் மீது ஊழியர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக சென்னா ராவ் என்பவரை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில், மூக்கில் காயம் ஏற்பட்ட ராவ், ரத்தம் சொட்ட சொட்ட கோவில் கருவறைக்கு முன் உள்ள காயத்ரி மண்டபத்தில் அமர்ந்துள்ளார். இதை கண்ட சக பக்தர்கள் கோபம் அடைந்து, தகராறு செய்துள்ளனர்.
இதனால் ஸ்ரீரங்கம் கோவிலில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் ரத்தம் சிந்தியது பொதுமக்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்து கோவில்களை நிர்வகிக்க அறநிலைய துறையே தேவையில்லை என்ற பா.ஜக.வின் கோரிக்கையை, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன. தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பில் அமரும்போது அறநிலையத்துறை இருக்காது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.