கால்நடைகளுக்காக வழங்கப்பட்ட 300 ஆம்புலன்ஸ்கள் எங்கே போனது? திமுக அரசுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

கால்நடைகளுக்காக கொடுத்த 300 ஆம்புலன்ஸ்களை தமிழக அரசு எங்கே ஒளித்து வைத்துள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (அக்டோபர் 18) அவர் அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகை ஆயுத பூஜை. இந்த வழிபாட்டுக்கு திமுக ஆட்சியாளர்கள் தடை விதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருப்பூர் மருத்துவமனையிலிருந்து வெளிவந்த அறிக்கையை திரும்ப பெறவில்லை என்றால் மக்கள் திமுக அரசுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள்.

லியோ திரைப்படம் பல தடைகளையும் மீறி தமிழகத்தில் வெளியாகியுள்ளது. 

கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நீதிமன்றம் கொடுத்துள்ள தண்டனையை அனுபவிக்க வேண்டும். பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டுமே தவிர வாக்கு அரசியலாக பார்க்க கூடாது.

ஜெய்ஸ்ரீராம் என்பது வெற்றியின் கோஷம். வெற்றிக்கான முழக்கம். இந்திய மக்களின் உணர்வாகத்தான் இதை பார்க்கிறேன். உதயநிதி இதையும் அரசியலாக்கப் பார்த்தார். அது அவருக்கு தோல்வியைத்தான் கொடுத்துள்ளது.

திமுகவினர்,  அமைச்சர் அலுவலகத்திலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் அலுவலகத்திலும் அமர்ந்து கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனர். திமுகவினர் இப்படித்தான் அரசை இயக்குகின்றனர். இதை அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மீன் வளத்துறைக்கு 1800 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். ஆனால் நலத் திட்ட உதவி வழங்கும் போது பிரதமர் நரேந்திர மோடி படத்தை போட மாநில அதிகாரிகள் தயங்குகின்றனர்.

கால்நடை துறைக்கு 300 ஆம்புலன்ஸ் கொடுத்துள்ளோம். இது 100 சதவீதம் மத்திய அரசின் நிதியில் வழங்கப்பட்டதாகும். ஆம்புலன்ஸை வெளியில் கொண்டு வந்தால் பிரதமர் மோடியின் படத்தை கட்டாயம் போட வேண்டும் என்பதற்காகவே வாகனத்தை எங்கோ ஒளித்து வைத்துள்ளனர். 

இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top