தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்க திமுக அரசு முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் வரும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் எக்ஸ் வலைத்தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘‘தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் திறப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்துடன் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 முதல் 2025 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் பள்ளிகள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் படி, மத்திய கல்வி அமைச்சகத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே கல்வி சம்பந்தமாக வலுவான உறவுகள் ஏற்படும். மேலும் இந்த பள்ளிகள் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். தமிழ்நாட்டின் இந்த முயற்சியை முழு மனதுடன் வரவேற்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிஎம் ஸ்ரீ பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, 2020 ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
இதில், காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் (இல்லம் தேடிக் கல்வி) போன்றவற்றை, வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பள்ளி மாணவர்கள், பல்துறை அறிவையும், பலமொழிப் புலமையும், தொழிற்கல்வித் திறனையும் ஒருங்கே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும்.
நமது மாணவர்கள் நலனுக்காக, தமிழக அரசு, அனைத்து பள்ளிகளிலும், இதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.